தசாபுத்தி

வைகுண்ட ஏகாதசி


'விஷ்ணு பக்தி உள்ளவர்கள் ஏகாதசி விரதத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். ஏகாதசி விரதம் ஆயுளையும், புகழையும், சந்தானத்தையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், ரூபத்தையும், மோக்ஷத்தையும் கொடுக்கும். யார் சிரத்தையுடன் இந்த விரதத்தை அனுஷ்டானம் செய்கிறார்களோ, அவர்கள் விஷ்ணு வடிவம் உடையவர்களாகவும் ஜீவன் முக்தர்களாகவும் ஆகின்றனர். ஆகவே, யுதிஷ்டிரா, நாரதருக்கு சிவபெருமான் கூறியதை இப்போது நான் உனக்குக் கூறினேன்' என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தர்மருக்கு ஏகாதசி மகிமையைக் கூறினார்.


வளர்பிறையில் ஒன்று, தேய்பிறை யில் ஒன்று என்று மாதத்திற்கு இரு ஏகாதசிகளும் வருடத்திற்கு 24 ஏகாதசி களும் வருகின்றன. (25 என்றும் கூறுவதுண்டு )


ஏகாதசிக்கு 26 பெயர்கள் உள்ளன அவை ...


1. உத்தாபனா 2. மோக்ஷதா 3. சயனா 17. காமிகா 18. பவித்ரோபனா 19. அஜா 20. பர்வர்த்தினி 21. இந்திரா 22. பாபங்குஷா 23. ரமா 24. ஹரிபோதினி (உத்தன) 25. பத்மினி 26. பரமா.


தட்சிணாயனத்தின் இறுதி மாதம் மார்கழி. தேவ லோகத்தின் விடியற்காலை நேரம். கிருத யுகத்தில் முரன் என்ற கொடிய அரக்கன் இருந்தான். தேவர்களையும், அந்தணர்களையும் வருத்தி வந்தான். இந்திரன் பரிகாரம் தேடி ஸ்ரீமகா விஷ்ணுவைச் சரணடைந்தான். முரன் என்ற அந்த அசுரனோடு ஸ்ரீ விஷ்ணு ஆயிரம் வருடங்கள் போர் புரிந்தார். தன் சுதர்சனத்தால் முரனின் அசுர சேனையை அழித்தார். பின்னர் களைப்பு நீங்க பதரிகாசிரமம் சென்று மிகப் பரந்த ஸிம்ஹாவதி என்கிற குகைக்குள் பள்ளி கொண்டார். துரத்திக்கொண்டு வந்த முரன் விஷ்ணுவைக் கொல்ல வாளை உருவினான். அச்சமயம் பரமாத்மாவின் தேகத்திலிருந்து ஒரு அழகிய மங்கை ஆயுதங்களோடு தோன்றி முரனை யுத்தத்திற்கு அழைத்தாள். அசுரன் அம்பை எடுக்கும் முன் அவள் ஹூங்காரம் செய்தாள். முரன் பஸ்பமானான் . பகவான் விழி திறந்தார். நடந்ததை அறிந்து மகிழ்ந்து , அவளுக்கு 'ஏகாதசி' எனப் பெயர் சூட்டினார்.


“நீ ஜனித்த தினத்தில் விரதம் காத்து என்னை வழிபடும் பக்தர்களுக்கு சொர்க்க பதவியை அளிப்பேன்” என்று வாக்களித்தார். இப்படித்தான் ஏகாதசி விரதம் என்ற பழக்கம் தோன்றியது. மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி... வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்பட்டு, பெரும் சிறப்பைப் பெற்றுள்ளது. வைகுண்டத்திலிருந்து முரனை வதைக்க பகவான் விஷ்ணு இறங்கி வந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்பர். அன்று விரதம் இருந்து பகவான் விஷ்ணுவை வழிபடுவோருக்கு மூன்று கோடி ஏகாதசிகளை கடைப்பிடித்த புண்ணியம் சேரும்.


அந்நாளில் இரவும், பகலும் உணவு, தூக்கம் இன்றி பக்தியுடன் நாராயணீயம், பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷசூக்தம் மற்றும் விஷ்ணு புகழ்பாடும் நூல்களை பாராயணம் செய்வது உத்தமமான காரியங்களாகும். இதன் பெருமையை சிவனே திருவாய் மலர்ந்து சொல்லி யிருப்பது மிக விசேசமானது அல்லவா?


விதர்ப்ப தேச மன்னர் ருக்மாங்கதன், கம்பமென்னும் நகரை ஆண்ட வைகாஸை மன்னன், அம்பரீஷன் போன்ற அரச பதவி பெற்றிருந்தவர்கள், ரிஷிகள் எல்லோரும் இவ்விரதத்தை கடைப்பிடித்திருந்தனர் என்பதோடு இம்மையில் சிறந்த வாழ்வும், மறுமையில் சொர்க்க வாழ்வும் பெற்றனர் என்பது வரலாறு. பொதுவாக விரதங்கள் தேக பலத்தை தருவதோடு, ஆன்ம பலத்தை பெருக்கும் என்பதும் சத்திய வாக்கு.


கரு.கருப்பையா - திருப்புவனம்