தசாபுத்தி

அம்பலத்து ஆண்டவனை தினம் பாடி சிவபேறு பெற்ற ஸ்ரீ முத்துதாண்டவர் !



தீந்தமிழ் நாட்டினில் சிதம்பரத்துக்கும் மாயவரத்துக்கும் இடையே உள்ள சீர்காழி என்னும் திருப்பதியில் திருஞான சம்பந்தருக்கு அன்னை ஞானப்பாலூட்டி ஸ்ரீதோணியப்பரை பாடச் செய்த அதே புண்ணிய பூமியில் முன்னூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் சீலமிகு சிவாச்சாரிய குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீ முத்துதாண்டவர். ஸ்ரீதோணியப்பரின் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகளில் ஆழ்ந்த வம்சமது. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் 'தாண்டவன்' என்பது. இளம் வயதிலேயே சீர்காழி ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்த கணிகையொருத்தியு டன் கொண்ட உறவினால் குன்ம நோயினால் பாதிக்கப்பட்ட இவரை, உறவினர்கள் அனைவரும் ஒதுக்கி வைத்தனர். பின்னும் தனக்கு வந்துள்ள குணப்படுத்த முடியாத குன்ம நோயின் காரணமாக பரம்பரைத் தொழிலான அர்ச்சகர் பணியினையும் மேற்கொள்ள முடியாத இவர், அது தீர இறைவனையும், இறைவியையும் சதா வேண்டினார். ஒருநாள் கோயில் வாகன அறையில் அவர் சோர்ந்து படுத்திருந்தபோது, அவர் உள்ளிருப்பது அறியாமல் சிப்பந்திகள் இரவு பூஜை முடிந்ததும் அறையை பூட்டி, ஆலயத்தையும் பூட்டிச் சென்றுவிட்டனர். நடு இரவில் கண் விழித்த அவருக்கு நோயின் வேதனையுடன் பசியும் சேர்ந்துகொள்ள தான் தனிமையில் இருப்பது உணர்ந்து இறைவனை வேண்டி அழுதார். அன்னையல்லவா இறைவி! தன் குழந்தை அழப் பொறுப்பாளா? அர்ச்சகரின் பத்து வயது மகள் வேடந்தாங்கி அவரை அணுகி, அவர் அழும் காரணத்தினை கேட்டாள். அவர் தனது உடலை வாட்டும் நோயைப் பற்றியும், இப்போது தன்னை வாட்டும் பசி, தாகத்தைப் பற்றியும் அவளிடம் கூறினார். அவள் தன்னால் அப்போதே அவரது பசியை போக்க முடியும் எனக்கூறி ஒரு கிண்ணத்தில் உணவினை அவருக்கு தந்தாள். பசி தீர்ந்த பிறகு அவளே அவரை சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை பாடினால் நோய் தீருமென வழி கூறினாள். அவரோ தனக்கு பாடல் இயற்றத் தெரியாதே, மேலும் படிப்பறிவில்லாத தான் எதை வைத்து பாடல் இயற்ற முடியும் எனக்கூறி, மேலும் தனக்கு ஸங்கீத ஞானமும் இல்லையே எனக்கூறி புலம்பினார். அந்த பெண்ணோ அவரை நடராஜப் பெருமான் முன் சென்று நின்று முதலில் காதில் விழும் வார்த்தைகளைக் கொண்டு பாடல் இயற்றுமாறு கூறி அம்பலத்தாண்டவனின் அருளால் எல்லாம் நல்லபடி நடக்குமென்றும் அவரது நோய் விலகும் என்றும் கூறி மறைந்தாள். அறை பூட்டப்பட்ட நிலையில் தன் மு இறைவியே என உணர்ந்த அவர் பொழுது விடியும்வரை அதே நினைவாக இருந்தார். விடிந்த பிறகு வந்த ஆலயப் பணியாளர்கள் அவரது மகளோ தான் முந்தின நாள் இரவு அங்கு வரவில்லை என மறுத்தாள். வந்தது இறைவி எனத் தெளிந்த அவர்கள் அவரிடம் பெருமதிப்பு கொண்டு அவரை 'ஸ்ரீமுத்துத்தாண்டவர்' என அழைக்கலா யினர். அன்று காலையே ஸ்ரீதாண்டவர் சீர்காழியிலிருந்து பன்னிரெண்டு மைல் தொலைவிலுள்ள சிதம்பரத்திற்கு சென்றார். அங்கு ஸ்ரீ நடராஜரின் பொன்னம்பலத்தில் தெற்கு நோக்கிய அவரது தாண்டவக் கோலத்தின் முன் நின்ற அவர், மறுபடி மறுபடி நடராஜரை நமஸ்கரிப்பதும் வலம் வருவதுமாக மற்ற பக்தர்களிடையே சென்று நின்றார். திடீரென அவரது செவியில் 'பூலோக கைலாச கிரி சிதம்பரம்' என்ற வரி முதலாவதாக வந்து விழுந்தது. உடனே அவர் அதை முதலாவது வரியாகக்கொண்டு பாவபிரியா ராகத்தில் மிஸ்ர ஜம்ப தாளத்தில் 'பூலோக கைலாஸகிரி சிதம்பரமல்லார் புவனத்தில் வேறும் உண்டோ ' என்ற இனிமையான பாடலைப் பாடினார். அதை அவர் பாடி முடித்ததும் தில்லை ஸ்ரீநடராஜர் அவர் மேல் கருணை கூர்ந்து அவரது நோயை தாம் நீக்கிட தாம் திருவுளம் கொண்டதாகவும், அவரது பாட்டுக்கு 9 பரிசாக தான் தந்துள்ள படிக்காசான ஐந்து பொற்காசுகளை தனது சந்நிதி படியினில் வைத்துள்ளதாகவும், இனி ஒவ்வொரு நாளும் அவ்வாறே வந்து காதில் விழும் முதற் சொற்களைக் கொண்டு பாடல்கள் பாடி பரிசு பெறலாம் என்றும் அஸரீரியாகக் கூறினார். தனக்கு அவ்வாறு பாடும் திறனில்லாத போதும் தன்னை பேரருள் கொண்டு அமுதூட்டிய இறைவிதான் பாட வைக்கிறாள் என அவர் உணர்ந்து பேருவகை அடைந்தார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் அவரது இனிய பாடலைக் கேட்டு வியந்து புகழ்ந்தனர். ஸ்ரீமுத்து தாண்டவரும் தினமும் சீர்காழி யிலிருந்து சிதம்பரம் வந்து தனது காதில் விழும் முதல் வார்த்தைகளைக் கொண்டு பாடல் இயற்றி பாடலானார். தினமும் ஸ்ரீகூத்தபிரானும் ஐந்து பொற்காசுகளை படியளந்தார். இது இனிதே தொடர்ந்தது. அவரது பக்தியை சோதிக்கும் வண்ணம் ஒரு நாள் வழியிலோடும் காவிரியின் கிளை நதியில் பெருவெள்ளம் வந்து அவரது சிதம்பர பயணம் தடைபட்டது. முன்னேற முடியாத அவர் ஸ்ரீநடராஜரை நினைந்துருகி காம்போதி ராகத்தில் 'காணாமல் வீணிலே காலம் கழித்தோம்' எனப்பாட ஸ்ரீ அம்பலவாணன் கிருபையால் வெள்ளம் வடிந்து அவருக்கு வழிவிட்டது. இன்புற்ற மனதினராய் அவர் வஸந்தா ராகம் ஆதி தாளத்தில் 'தரிஸனம் செய்வேனே' எனப்பாடி பின்னர் சென்று ஸ்ரீதில்லை நாதன் முன் நின்று 'கண்டபின் கண் குளிர்ந்தேன்' எனப் பாடலானார். பின்னொரு நாள் சோதனையாக எந்தவொரு சொல்லுமே காதில் விழாது வருந்தியவராக ஸுர்யகாந்தம் ராகத்தில் மிஸ்ர ஜம்ப தாளத்தில் 'பேசாதே நெஞ்சமே' என பேச திறமற்று நின்ற பக்தர்களின் உள்ளத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பாடினார். வேறொரு நாள் அவரை நாகமொன்று கடித்துவிடவும் அவர், "அருமருந்தொரு தனி மருந்திது அம்பலத்தில் கண்டேனே' என காம்போதி ராகத்தில் ரூபக தாளத்தில் பாடினார். விஷமும் ஸ்ரீவிடமுண்ட கண்டரின் பேரருளால் இறங்கியது. இவ்வாறு இறைவியின் கையினால் அமுதுண்ட நாளாய் ஸ்ரீபொன்னம்பலத்தான் பேரருளால் ஸ்ரீமுத்து தாண்டவர் பல பாடல்களை பிரஸித்தி பெற்ற ராகங்களிலும் தாளங்களிலும் தொடர்ந்து பாடி சிவ பதவி அடைந்தார். | முக்தி க்ஷேத்திரங்களை நான்காக கூறுவர். கமலாலயம் உள்ள திருவாரூரில் பிறப்பதனால் முக்தியெனக் கூறுவர். ஸங்கீத மும்மூர்த்திகளும் திருவாரூரில் பிறந்தவர்கள்தான். காசியில் இறப்பதனால் முக்தியெனக் கூறுவர். அங்கு இறப்பவர்களின் காதினில் ஸ்ரீவிஸ்வநாதரே தாரக மந்திரத்தை உபதேசித்து மோக்ஷத்தை தந்து விடுகிறார். அருணாசலம் நினைத்த மாத்திரத்தில் முக்தி யென கூறுவர். சிதம்பரமோ கண்டமாத்திரத்தில் முக்தியெனக் கூறுவர். அந்த ஆகாஸ க்ஷேத்திரத்தில் ஸ்ரீநடராஜரை தரிசித்து ஸ்ரீநடராஜர் பதம் பணிவோம். நாடிநூல்


நாவலர் M.கனகராஜ்,